Thursday, December 28, 2006

3 மாணவர்களும், 50 மாணவிகளும் ஒரு வகுப்பில்.

கல்லூரி எல்லோருக்கும் மறக்க முடியாத பல அனுபவங்களை தந்திருக்கும், அது போல் எனக்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவங்களில் இதுவும் ஒன்று. நல்ல வேளையாக 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கவில்லை அதனால் B.E சேர வாய்ப்பில்லாமல் போனது. B.Sc(I.T) என்று நான் முடிவு செய்தேன், தஞ்சையில் உள்ள பிரபல கல்லூரி, என்று என் தந்தை முடிவு செய்தார். காரணம் அங்கு படித்தால் நல்ல மதிப்பெண்கள் வாங்கலாம் என்று நினைத்தார். மதிப்பெண்கள் மட்டும் தான் வாங்க முடியும் என்பது எங்களுக்கு அப்போது தெரியாமல் போய்விட்டது, பிறகென்ன அங்கு படித்து தெரிந்து கொண்டோம்.

முதல் நாள் வகுப்பு என்பதால் வெகு சீக்கிரமாகவே 9 மணி கல்லூரிக்கு 8 மணிக்கே சென்று விட்டேன். கல்லூரியில் என்னையும் வாயிற் காவலரையும் தவிர வேறு யாரும் இல்லை. இருந்த மூன்று தளங்களையும் சும்மா சுற்றி விட்டு, எங்கள் வகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று அமர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை, ஏதோ ஒரு புதிய அனுபவத்திற்காக காத்திருந்த சந்தோஷமும், படபடப்பும் மனதில் இருந்தது. 8.30 மணி இருக்கும் ஒரு பெண் அறையில் நுழைந்தாள், எங்கோ பார்த்தது போல் தெரிந்தது. சரி பிறகு தெரிந்து கொள்ளலாம் என்று பேசாமல் இருந்து விட்டேன். சிறிது நேரத்திற்கெல்லாம் இரண்டு பையன்கள் வகுப்பிற்குள் வர, வழக்கமான உரையாடல்கள் தொடர்ந்தது. கல்லூரிப் பேருந்துகள் வந்ததும் கல்லூரி நிறம்பியது, எங்கள் வகுப்பையும் சேர்த்து.

வகுப்பிற்குள் நுழைந்த எல்லா புதிய முகங்களும் பெண்கள் முகமாகவே இருந்தது. எங்கள் மூவரைத் தவிர வேறு பையன்களே இல்லை, வகுப்பறை பெணகளால் நிறம்பியது. கிட்டத்தட்ட 50 மாணவிகளும் 3 மாணவர்களும், ஆரம்பத்தில் இருந்த சந்தோஷம எந்த வழியே போனதென்று தெரியவில்லை. நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் சற்று தயக்கதுடனேயே பார்த்துக் கொண்டோம். என்னடா இது வசமா வந்து சிக்கி கிட்டோமே, இன்னும் 3 வருசம் எப்படி தள்றதுன்னு தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தோம்.

இந்த சமயம் அந்த கல்லூரியைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும், ஒரு நல்ல கல்லூரி என்று பெயர் வாங்க வேண்டும் என்பதே அவர்களின் ஆசை. கவனிக்கவும் பெயர் வாங்க வேண்டும் என்பதே தவிர நல்ல கல்லூரியாக ஆக வேண்டும் என்பதல்ல. அங்கு படிக்கும் மாணவர்கள் பல்கலைக் கழக் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், அதுதான் அவர்களது முதல் லட்சியம். கல்லூரி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறாத மாணவர்களுக்கு Hall Ticket வழங்காமல் அவர்களை தேர்வு எழுதாமல் செய்து விடுவார்கள். Letter Writing Exerciseல் போலீஸ் ஸ்டேசனுக்கு சைக்கிள் திருட்டுப்போன விஷயம் தொடர்பாக கொடுக்கும் புகாரை கூட மாணவர்கள் சொந்தமாக எழுதக்கூடாது, ஆங்கில ஆசிரியர் கொடுத்த Print Outல் உள்ளதைத்தான் எழுத வேண்டும். Comprehension Exerciseஐ மனப்பாடம் செய்ய எங்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுத்த வழியை சொன்னால், சிரிப்பு தான் வரும். என்ன சார் இப்படி மனப்பாடம் செய்ய சொல்றீங்க, சொந்தமாதான புரிஞ்சு நம்மாளா தான செய்யனும்னு நான் கேட்டதற்கு'அப்புறம் நீ பரீட்சையில பெயில் ஆயிடுவ' என்று பதில் சொன்னார். இப்படி படிச்சா, வாழ்க்கையில பெயில் ஆயிடுவேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு பேசாமல் அமர்ந்து விட்டேன்.

சரி நம்ம வகுப்புல என்ன நடந்ததுன்னு பார்ப்போம். பத்தாம் வகுப்பு வரை ஆண்கள் வகுப்பிலேயே படித்து விட்டு, +1,+2 ல 36 மாணவர்களில் 5 பெண்கள்னு படிச்ச எனக்கு அப்போது, ரோலர் கோஸ்டர்ல போயிக்கிட்டு இருக்கிற மாதிரி இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் ஆசிரியர் உள்ளே வந்தார். Pricipals of Information Technology பேப்பர் சிலபஸ் கொடுத்துட்டு பாடத்தை ஆரம்பித்தார். வருகைப் பதிவேடு வந்து சேர்ந்தது, வரிசையாக எல்லோர் பேரையும் ஆசிரியர் அழைத்தார். ஆனால் . . . . . . எங்கள் மூன்று பேர் பேர்கள் மட்டும் மிஸ்ஸிங். ஆசிரியர் சற்றே குழம்பிப் போய், மேனேஜரை அழைத்தார். எங்கள் கடிதங்களை பார்த்து விட்டு, உங்களுக்கு கல்லூரி 1-5 shift. போயிட்டு 1மணி shiftக்கு வாங்க என்றார் மேனேஜர் (கல்லூரி அப்போது 9-1 ஒரு Shiftம் 1-5 ஒரு Shiftம் நடந்தது).

மூவரும் வகுப்பை விட்டு வெளியே வந்தோம், மதியம் வரை கல்லூரிக்கு வெளியே சுற்றி விட்டு மதிய வகுப்பில் சென்று அமர்ந்தோம் . . . . . . . .


(தொடரலாம் என்று நினைக்கிறேன்)

12 comments:

sivagnanamji(#16342789) said...

//தொடரலாம்......//

.....லாம்.....லாம்.....லாம்!

Anonymous said...

i am aasath:

Why are you start your Flsh-back. Have you hope that like a Real Hero. Try to Justify

வெங்கட்ராமன் said...

இது கதையல்ல கருப்புச்சரித்திரம் அப்புடீன்னு டயலாக் அடிக்க மாட்டேன்.

சில கல்லூரிகளின் வண்டவாளங்களை, தண்டவாளம் ஏற்றும் முயற்சி அவ்வளவுதான்.

ஏற்கனவே சில பதிவுகளில் சொல்ல முயற்ச்சித்ததுதான், கொஞ்சம் சுவாரசியமாக(?) சொல்ல முயற்சிக்கிறேன்.

http://rajapattai.blogspot.com/2006/12/blog-post_11.html

http://rajapattai.blogspot.com/2006/12/blog-post_116549045431882333.html

வெங்கட்ராமன் said...

sivagnanamji தங்கள் வருகைக்கு நன்றி.

தொடர முயல்கிறேன். . . .

சந்தோஷ் aka Santhosh said...

ஆகா வெங்கட் நீங்களும் நம்ம காலேஜ் தானா? நான் 2001 MS(IT) batch. நீங்க எப்படி?

கோபிநாத் said...

வெங்கட்
கல்லூரி வாழ்க ரொம்ப சுவையானது. அதுவும் உங்களுது ரொம்ப சுவையா இருக்கும் போல.

\\ கிட்டத்தட்ட 50 மாணவிகளும் 3 மாணவர்களும், ஆரம்பத்தில் இருந்த சந்தோஷம எந்த வழியே போனதென்று தெரியவில்லை\\

நினைச்சி பார்த்தலோ பக்குன்னு இருக்கு :)))

\\ன்ன சார் இப்படி மனப்பாடம் செய்ய சொல்றீங்க, சொந்தமாதான புரிஞ்சு நம்மாளா தான செய்யனும்னு நான் கேட்டதற்கு 'அப்புறம் நீ பரீட்சையில பெயில் ஆயிடுவ' \\

இப்படி தான் கல்லூரி எல்லாம் இப்ப பள்ளியாகிவிட்டது.

\(தொடரலாம் என்று நினைக்கிறேன்)\\

கண்டிப்பாக தொடரலாம்..அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

வெங்கட்ராமன் said...

சந்தோஷ் தங்கள் வருகைக்கு நன்றி.

நானும் அங்கதான் படிச்சேன், விவரத்த உங்க பின்னூட்டத்தில கொடுத்திருக்கிறேன்.

வெங்கட்ராமன் said...

கோபிநாத், எல்லோரும் விரும்பும் மாதிரியான நிகழ்வுகளை மட்டும் சொல்லாம் என்று நினைக்கிறேன்.

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

அடுத்த பதிவு இட்டவுடன் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துகிறேன்.

சேதுக்கரசி said...

நான் 11வது, 12வது படிக்கும்போதும் அப்படித்தான், சுமார் 40-50 மாணவிகளும், இரண்டு மாணவர்களும்! 11வது முடிந்ததும் அவர்கள் இருவரும் டி.சி. வாங்கலாம் என்று முடிவெடுத்து, வகுப்பாசிரியரை அணுகியிருக்கிறார்கள். "ஏம்பா?" என்றாராம். அவர்கள் "எப்படியோ இருக்கு சார்" என்றார்களாம். அதற்கு அவர், "இன்னொரு பள்ளிக்கூடத்துக்குப் போனால் இன்னும் எப்படியெப்படியோ இருக்க வாய்ப்புண்டு, எனவே இங்கேயே தொடருங்கள்" என்று அறிவுரையளித்தாராம் :)

வெங்கட்ராமன் said...

சேதுக்கரசி அவர்களே, தங்கள் வருகைக்கு நன்றி

.:: மை ஃபிரண்ட் ::. @ .:: My Friend ::. said...

உங்கள் பதிவுகளை சில நாட்களாய் தொடர்ந்து படித்து வருகிறேன். இப்போதுதான் பதிலெலுத சந்தர்ப்பம் கிடைத்தது.

நன்றாக எழுதுகிறீர்கள். இன்னும் நிஐய எழுதுங்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள். :-)

வெங்கட்ராமன் said...

////////////
.:: My Friend ::. said...
உங்கள் பதிவுகளை சில நாட்களாய் தொடர்ந்து படித்து வருகிறேன். இப்போதுதான் பதிலெலுத சந்தர்ப்பம் கிடைத்தது.
////////////

நன்றி .:: My Friend ::.

உங்கள் பின்னூட்டம் எப்படியோ டெலிட் ஆகிவிட்டது, இப்பொழுதுதான் Mail ல் கண்டுபிடித்து பிரசுரித்துள்ளேன்.