Tuesday, July 08, 2008

உடையாரும் அடையாரும்

பாலகுமாரன் புத்தகங்கள் எதையும் நான் படித்தது கிடையாது. இது வரை நான் படித்த அத்தனை சரித்திர நாவல்களும் என்னை ஏமாற்றியதில்லை. கல்கி, சாடில்யன், அகிலனைப் போல் பாலகுமாரனும் என்னை ஏமாற்ற மாட்டார் என்று தான் நினைத்தேன். கடைசியில் ஏமாற்றிவிட்டார்.

தஞ்சை பெரிய கோவிலை கட்டுவது தான் கதை. தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்குண்டான வரைபடங்கள் வந்து சேருகிறது என்று உடையார் ஆரம்பமாகிறது. கதை ராஜராஜ சோழரையும், ராஜேந்திர சோழரையும், பெரிய கோவில் மட்டுமல்லாது தஞ்சைத் தரணி மக்களையும் மையமாக வைத்து கதை நகருகிறது. பொதுவாகவே வரலாற்று நாவல்களில் வரும் அரசரைப் பற்றிய வர்னனைகளும் அரண்மனை கோட்டை கொத்தளங்களை பற்றிய விளக்கங்களும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இலை மறை காயாக சொல்லப்படும் விஷய்ங்கள் தான் வாசகனின் கற்பனையை வளர்க்கும். ஆனால் உடையாரில் அப்படி இல்லாமல், எல்லா விஷயங்களையும் வர்னனை செய்து அலுப்பை மட்டுமே ஏற்படுத்துகிறார் ஆசிரியர். கதை, திருப்பங்கள், ரகசியங்கள், எதிர்பார்ப்புகள் என்று இல்லாது சம்பவங்கள், ஜாதிப் பிரச்சனைகள், பொறாமை என்று ஆறு பாகங்கள் வரை போகிறது.

ஜாதிகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளும் சண்டைகளும் அன்று இருந்ததற்கான ஆதாரம் கிடையாது, அது பற்றி முழுமையாகவும் யாருக்கும் தெரியாத போது, பெரும்பாலான சம்பவங்கள் சாதிச் சண்டைளும், போட்டி, பொறாமையாகவும் இருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது. சோழர்கள் காலத்தில் போட்டி பொறாமை மட்டும் தான் இருந்ததா என்ற சந்தேகம் கூட எழுகிறது.

கதையில், கோவில் கட்டுவதற்கு எங்கு கல் எங்கு எடுப்பது என்று முடிவு செய்யும் முன்பே, சிலை செய்வதற்கு மாதிரியாக தாசிப் பெண்டுகள் தஞ்சைக்கு வந்து விடுகிறார்கள். கதை சிற்பிகளை சுற்றி நடைபெறுவதை விட தாசிப் பெண்களையே அதிகம் சுற்றி வருவது போல் இருக்கிறது.
விலையும் அதிகம் தான், அங்கங்கே வரும் எழுத்துப் பிழைகளும் அதிகம். முற்றுப் புள்ளி எங்கே இருக்க வேண்டும் என்ற குழப்பம் நம்க்கே வந்து விடுகிறது. சில அத்தியாயங்கள் நீண்டு கொண்டே போகிறது, சில உடன் முடிந்து விடுகிறது. புத்தகங்கள் அச்சிடுவதிலேயே பல குழப்பங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

உடையார் படித்துவிட்டு, அதில் சொல்லப் பட்டிருப்பது தான், சோழர் காலத்து வாழ்க்கை முறை என்று யாரும் எண்ண வேண்டாம். உடையாரில் சொல்லப் பட்ட மக்களின் வாழ்க்கை முறை சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் ஆசிரியரின் கற்பனை. அதுமட்டுமல்லாது நீங்கள் புதிதாகவோ அரிதாகவோ வரலாற்று நாவல் படிப்பவரென்றால், உடையார் உங்களுக்கானதல்ல. என்னை போலவும் விக்னேஷ்வரனைப் போலவும் வராலாற்று நாவலகளில் பித்து பிடித்து திரிபவர்களால் மட்டுமே படிக்க முடியும்.

உடையார் என்ற அடைமொழியை பொன்னியின் செல்வனில் எங்கேயும் காணமுடியாது, வேங்கையின் மைந்தனிலும் சில இடங்களில் மட்டுமே கான முடியும், அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. அதைப் பற்றியும் அதிகமாக ஆசிரியர் விளக்க வில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

இது புத்தக விமர்சனம் இல்லை, உடையாரும் என் எண்ணங்களும் கேள்விகளும் அவ்வளவே. . .

ஏன் இந்த தலைப்பு என்கிறீர்களா? தினமும் அலுவலகம் செல்லும் வழியில் இருப்பது அடையார், கையில் இருப்பது உடையார். இரண்டும் என்னை என்னைப் பெரிதாக பாதிக்க வில்லை.

4 comments:

Anonymous said...

உடையார் எல்லா பாகங்களும் வாங்கி வைத்திருக்கிறேன். ஒரு முறை படித்து விட்டேன். படித்த போது ஆசிரியர் இப்படி நினைக்கிறார். ஆசிரியர் இப்படி வியக்கிறார் என்று தோன்றுகிறதே தவிர கதாபாத்திரங்கள் வியப்பதாகவோ, நினைப்பதாகவோ தோன்றவில்லை. வந்தியத்தேவனுடன் பயணித்த சந்தோஷம் கோயில் கட்டுவதில் ஏற்படவில்லை.

வெங்கட்ராமன் said...

ஆசிரியர் இப்படி வியக்கிறார் என்று தோன்றுகிறதே தவிர கதாபாத்திரங்கள் வியப்பதாகவோ, நினைப்பதாகவோ தோன்றவில்லை.

நானும் பல முறை இப்படி உணர்ந்திருக்கிறேன்.

வந்தியத்தேவனுடன் பயணித்த சந்தோஷம் கோயில் கட்டுவதில் ஏற்படவில்லை.

உண்மைதான். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

VIKNESHWARAN said...

நான் இந்தப் பதிவை படிக்க விரும்பவில்லை... புத்தகங்களை வாசித்து முடித்துவிட்டு வருகிறேன்...

.:: மை ஃபிரண்ட் ::. said...

அடுத்த பர்சேஸிங்ல உடையார் வாங்கலாமான்னு நெனச்சிட்டு இருந்தேன். உங்க பதிவை படிச்சதும் இப்போதைக்கு வேணாம்ன்னு தோணுது. சரிதானே வெங்கட்? ;-)