Wednesday, April 15, 2009

ஐடி மக்கள் அன்றும் இன்றும்

அன்று

ஹலோ,

என்னடா உயிரோடதான் இருக்கியா?

இல்லடா, வேல ஜாஸ்திடா! வீட்டுக்கு தூங்க மட்டும் தான் வற்றேன். உனக்கு எப்டி டா இருக்கு.

ஒரு மாசமா பென்ச்ல இருக்கண்டா!

ஜாலியா பெஞ்ல இருக்க. என்ன பாரு, வேல முழி பிதுங்குது. கொடுத்து வச்சவண்டா நீ. பார்த்து இப்பவே கல்யானத்த முடிச்சுடு, லைப்ப ஜாலியா என்ஜாய் பண்ணு.இன்று

ஹலோ

என்னடா உயிரோடதான் இருக்கியா?

இல்லடா, வேல ஜாஸ்திடா! வீட்டுக்கு தூங்க மட்டும் தான் வற்றேன். உனக்கு எப்டி டா இருக்கு.

ஜாலியா இருக்க. என்ன பாரு, முழி பிதுங்குது, கொடுத்து வச்சவண்டா நீ ப்ராஜக்ட் ல இருக்க. நான் ஒரு மாசமா பென்ச்ல இருக்கண்டா! எப்ப என்ன நடக்கும்னு தெரியலடா. செஞ்சுகிட்டிருந்த ப்ராஜக்ட் கூட நிப்பாட்டிடாஙக, ரொம்ப பயமா இருக்குடா.

----------------

கண் இமைக்கும் நொடியில்
எதுவும் நடக்கும்.
இது எனக்குத் தெரியும்
நாளை உனக்குப் புரியும்.
- சந்திரமுகி பாடல் (அ . . அ. . . அண்ணனோட பாட்டு. . . .)

Tuesday, April 07, 2009

சாண்டில்யனின் ராஜபேரிகை

பெரும்பாலான வரலாற்று நாவல்களில் சில முக்கிய கதா பாத்திரங்கள் வரலாற்று நாயகர்களாகவும், மற்ற பாத்திரங்கள் ஆசிரியரின் விருப்பத்திற்கும் கதைக்கும் தேவைப் பட்ட கற்பனை கதா பாத்திரங்களாகவும் இருப்பர். வரலாற்றில் நடந்த முக்கிய போர்களையும் சில குறிப்புகளையும் வைத்தே எல்லா நாவல்களும் புனையப்பட்டிருக்கும். சாண்டில்யனின் ராஜ பேரிகை அப்படிப்பட்ட வரலாற்று நாவல்களைப் போல் அல்லாமல் சற்றே வித்தியாசமானது.எல்லா வளப்பங்களும் உடைய இந்தப் பாரத பூமி, சந்திரகுப்தன், அசோகன் போன்ற ஏகசக்ராதிபதிகளையும், ரணா பிரதாப்சிங், சிவாஜி போன்ற சிறந்த வீரர்களையும் பெற்றிருந்த இந்தப் பெரிய புண்ணிய பூமி, ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஆங்கிலேயரிடம் எப்படி அடிமைப்பட்டது? வியாபாரிகளாக இங்கு வந்த ஒரு சிறு கூட்டத்தால் இங்கு எப்படிப் பெரிய சாம்ராஜ்யத்தை அமைக்க முடிந்தது? இப்படி இப்படி யெல்லாம் நினைத்தேன். அதனால் அதைப் பற்றி ஆராய்ச்சியிலும் இறங்கினேன். அந்த ஆராய்ச்சியின் விளைவுதான் “ராஜ பேரிகை”

- சாண்டில்யனின் முன்னுரை ராஜ பேரிக புத்தகத்தில் இருந்து.


புத்தகத்தின் கதையை நான் சொல்லப் போவதில்லை, சில கதாபாத்திரங்கள் பற்றிய அறிமுகமும் புத்தகத்தை பற்றிய என் என்னங்களும் அனுபவங்களையும் மட்டுமே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

கதைக் களம்: வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், தங்களுடைய காலனியாதிக்கத்திற்கு அஸ்த்திவாரம் இட்ட தருனங்கள் தான் கதைக் களம். இந்திய அரசுகளுக்குள் அச்சமயம் இருந்த பகைமையை லாவகமா பிரென்ச் மற்றும் பிட்டிஷ் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கு உதவுவது போல் களத்தில் இறங்கின. பிரிட்டிஷ் அணி போரில் வென்று விட பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இங்கு துளிர் விட ஆரம்பித்தது.

கதை மாந்தர்கள்: பெரும்பாலான கதாபாத்திரஙகள் வரலாற்று மாந்தர்களே. ராபர்ட் கிளைவ், ராஜா பிரதாப் சிங், மானாஜி அப்பா, முராரிராவ், சந்தாசாகிப், முகமது அலி, கேப்டன் ஜின்ஜின்ஸ், கேப்டன் டால்டன், மேஜர் லாரன்ஸ், கவர்னர் ஸாண்டர்ஸ், ப்ரென்ச் கவர்னர் டூப்ளே, டிபுஸ்ஸி என்று எங்கும் வரலாற்று மாந்தர்களே எந்தப் பக்கம் திரும்பினாலும் நிற்கிறார்கள். விஜயகுமாரன், ராஜா பிராப் சிங் மகள் நந்தினி போன்ற சில கற்பனை பாத்திரங்களும் உண்டு.

தேவிக் கோட்டையின் மீதான பிரிட்டிஷாரின் படை எடுப்பு முதல், ஆங்கிலேயர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெளிவாக சொல்லப் பட்டிருக்கின்றன. பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளை தேர்ந்தெடுத்து, கதையை நகர்த்தி இருக்கும் சாண்டில்யனின் திறமை அபாரமானது. பல நிகழ்வுகளும், சம்பாஷனைகளும் ஆங்கிலேயர்கள் பலர் எழுதிய புத்தகத்தில் இருந்தே எடுத்தாளப் பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்களின் எல்லா போர் நடவடிக்கைகளும் வருடம் தேதி வாரியாக விவரிக்கப் பட்டிருக்கிறது. எல்லா விஷயங்களும் கதை ஒட்டத்திலேயே வருவதால் கதையின் சுவாரஸ்யம் அதிகமாகிறது.

வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் எளிதாக இருக்கும் வகையில், பல நிகழ்வுகள் குறித்த செய்திகளையும் அது எந்த புத்தகத்தில் இருந்து திரட்டப்பட்டது என்ற விபரங்களையும் தந்துள்ளார் ஆசிரியர்.

* பிரிட்டிஷ் மற்றும் ப்ரென்ச் படையில் அதிகமாக நம் நாட்டவர்களே இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

* தொலை நோக்கு பார்வை மற்றும் மற்ற அரசுகளுடன் ஒற்றுமை இல்லாது முட்டாள் தனமாக ப்ரென்ச் மற்றும் ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்த இந்திய அரசுகள் தான் நம்முடைய அடிமை தனத்திற்கு வித்திட்டவர்கள் என்று தெளிவாக புரிந்தது.

* வெள்ளையர்களுக்கு அவர்கள் நாட்டின் மீது இருந்த காதலும், அவர்களின் அர்பனிப்பும் தான் அவர்களை இங்கே வேரூன்ற வைத்திருக்கிறது என்ற உண்மையை அழகாக உணர்த்துகிறது.

* விஜயகுமாரன் நந்தினியின் காதல் லீலைகள் அவ்வப்போது கிளுகிளுப்பு தருகின்றது.

* கடைசி அத்தியாயங்களில் ஆவியாக வரும், விஜயகுமாரனின் அம்மாவின் கதாபாத்திரம் ஏன் என்றே தெரியவில்லை. அந்த ஒரு விஷயம் மட்டும் சிறு குறையாகவே எனக்குப் படுகிறது.

ஆறு மாத காலம் உழைத்து, பல்வேறு புத்தகங்களை படித்து அழகான இந்த நாவலை நமக்கு அளித்த சாண்டில்யனுக்கு என் நன்றிகள்.

Thursday, March 26, 2009

உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா . . . ?

உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா . . . .

கீர்த்தி, குடித்துக் கொண்டிருந்த காபி கொப்பளிக்க பலமாக சிரித்து விட்டு திருப்பிக் கேட்டாள் "உனக்கு தெரியாதா ?"

தெரியும், இல்ல மாப்ள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா ?

ம்ம்.

எப்பிடி எதிர்பார்க்கிறாங்க உங்க வீட்ல, ஜாதி ஜாதகம் எல்லாம் பார்ப்பாங்களா? இல்ல உங்க ரிலேசன் ல பார்க்குறாங்களா?
(நித்யா கொஞ்சம் சீரியசாகவே அவளிடம் கேட்டாள்)

நல்ல பையன், நம்பிக்கையான குடும்பமா இருந்தா போதும்.
கண்டிப்பா வெஜிடேரியனா இருக்கணும் அவ்வளவு தான்.
என்ன ஆச்சு, ஐடி டவுன் ஆனதால தொழில மாத்தி கிட்டியா ?

இல்ல சும்மா தான் கேட்டேன்

பொய் சொல்லாத, என்ன மேட்டர்னு சொல்லு.

இல்ல விஜய் தான் இந்த விபரமெல்லாம் கேட்டாரு.

விஜயா ? (அவள் தொனியில் ஆச்சர்யம் நிரம்பி வழிந்தது)

உனக்கு ஏதாவது விஜய் மேல . . . . .? (என்று லேசாக இழுத்தாள் நித்யா)

அப்படி ஒன்னும் கிடையாது (சட்டென்று பதில் வந்தது கீர்த்தியிடமிருந்து)

உன் கிட்ட புரோபோஸ் பண்ணா ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் சொல்லிடாத? நானே கேட்டேன் என்ன விஷயம்னு, உன் கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னாரு.
"நான் கேட்டதா சொல்ல வேணாம், நீங்களா கேக்குற மாதிரி கேட்டு சொல்லுங்க . . . . " ன்னு சொன்னாரு. அப்புறம் இந்த விஷயம் உனக்கு தெரியாத மாதிரியே காட்டிக்க. . .

ஹர்ட் பண்ற மாதிரி ஒன்னும் சொல்ல மாட்டேன். அவரும் டிசண்டா தான் கேப்பாரு, நானும் டிசண்டா முடியாது ன்னு சொல்ல போறேன், அவ்ளோதான். என்று கண்களை சிமிட்டியவாரே அவளுடைய வழக்கமான புன்னகையை உதிர்த்தாள் கீர்த்தி.

------------------- மறு நாள் -------------------

மெசஞ்சரில் விஜயும் கீர்த்தியும்

Vijay : Coffee ?
Keerthi : Its 7 now, I am going to leave now.
Vijay : I want to talk to to something, please come
Keerthi : k, can we start ?
Vijay : okye. . . .

விஜய்யும் கீர்த்தியும் ஒன்றாக கிளம்பியதை நித்யா கவனித்தாள்.

pantry காலியாக இருந்தது

எதற்காக விஜய் அழைத்திருக்கலாம் என்று முன்பே யூகித்திருந்ததால், அவளுடைய பதில் தயாராகவே இருந்தது. அவன் முதலில் பேசட்டும் என்று அமைதியாகவே இருந்தாள் கீர்த்தி. விஜையே ஆரம்பித்தான்,

அப்புறம் மாப்ள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கு.

(லேசாக புன்னகைத்தாள்)

இல்ல, எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான், உங்களுக்கும் அவனுக்கும் நல்ல பொருத்தம் இருக்கும். குடும்பமும் நல்ல குடும்பம். என்ன சொல்றிங்க? உங்க வீட்லயும், அவங்க வீட்லயும் பேசி பார்க்கலாமா?

(எவ்ளோ பெரிய bug, issue வந்தாலும் அழகாக அதை சரி செய்து client யும் manager யும் சமாளித்து விடும் அவன் தந்திரம் இங்கும் வேலை செய்வதை உணர்ந்தாள்)

எங்க வீட்ல வெஜிடேரியன் ல தான் பார்க்குறாங்க?

அவனும் சைவம் தான்.

(சற்றே குழப்ப மடைந்தாள், வெள்ளிக் கிழமைன்னா பிரியாணி சாப்பிடற ஆளாச்சே விஜய், கொஞ்சம் கலவரம் நிறைந்த கண்களுடனும் மனதுடனும் அவனை பார்த்தாள்)

இல்ல என் பிரண்டுக்கு பொண்ணு பாக்குறாங்க, உங்களுக்கும் அவனுக்கும் பொருத்தமா இருக்கும் ன்னு தோணிச்சி, அதான் கேட்டேன்.

உங்க பிரண்டு என்ன லவ் பண்றாரா?

இல்ல, அவன் உங்கள பார்த்தது கூட இல்ல. . . .

(அவள் எதையோ எதிர் பார்த்து பதில் சொல்ல தயாராயிருக்க, அவனோ வித்தியாசமாய் ஒன்றை சொல்ல அவளது குழப்பங்கள் இன்னும் அதிகமாகின. கண்களை மூடி நடந்ததை மெல்ல அசை போட்டாள். எல்லா விஷயங்களும் அவளுக்கு தெளிவாய் புரிந்தவுடன் கேட்டாள். . . )

உங்க பிரண்டுக்கு நீங்க பொண்ணு பாக்குறீங்க?

மெதுவாக தலை அசைத்தான் ஆமாம் என்று.

ஏன்? என்னை?

(அந்தச் சூழ்நிலையில், மனத்தில் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் இரண்டு வார்த்தைகள் மட்டும் அவளிடமிருந்து வந்தது, எல்லா கேள்விகளையும் சுமந்து)

உங்க way of thinking அப்புறம் behaviour எல்லாம் அவன மாதிரியும் அவங்க family மாதிரியே இருக்கு, அதான் உங்களுக்கும் அவனுக்கும் பொருத்தமா இருக்கும். அவன்கிட்ட உங்கள பத்தியும் இந்த விஷயத்த பத்தியும் சொன்னேன், உங்க கிட்ட பேசிட்டு சொல்ல சொன்னான். யோசிச்சி பாருங்க, உங்க அப்பா அம்மா கிட்ட பேசுங்க அப்புறம் சொல்லுங்க. . . . . .

சரி. . . (கொஞ்சம் நிதானித்து விட்டு பிறகு கேட்டாள். . . .)

உங்க பிரண்டு ஸ்மார்ட்டா இருப்பாரா ?

ஆங். . . ஏன் அளவுக்கு இல்லேன்னாலும், கொஞ்சம் சுமாரா இருப்பான். (என்று நக்கலாக சிரித்தான்)

------------------- இரவு 11.30 மணி -------------------

Nithya calling. . . . .

10 மிஸ்டு கால் ஆகிவிட்டது, பாவம் என்று பதினோராவது முறையாக வந்த அழைப்பை அட்டன் செய்தான்.

என்ன சார், பிரண்டுக்கு பொண்ணு பார்த்தாச்சா? பெரிய மனுஷனா ஆயிட்டிங்க. . .

ம்ம். . . .

இத என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல? நேத்து ராத்திரி துக்கமே இல்ல. நீங்க கீர்த்திய லவ் பண்றிங்கன்னு நினைச்சு பயந்து போயிட்டேன். இப்ப அவளுக்கு கால் பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்டா, அப்பா அம்மா கிட்ட பேசிட்டு தான் சொல்லணும், எனக்கு 90% ஒக்கே ன்னு சொன்னா. எனக்கு உயிரே போயிடுச்சு. அப்புறம் தான் எல்லாத்தையும் சொன்னா.

(பட பட வென்று அவளிடமிருந்து வார்த்தைகள் உதிர்ந்து கொண்டே இருந்தது அவளிடமிருந்து. லேசான புன்னகையுடன் மறு முனையில் கேட்டுக் கொண்டிருந்தான் விஜய்.)

ஏன் இப்படி சஸ்பென்ஸ் வச்சிங்க, சொல்லுங்க என்று முடித்தாள்.

நீங்க ஏன் நேத்து ராத்திரி துங்கல?
நான் கீர்த்திய லவ் பண்றதா நினைச்சு நீங்க ஏன் பயந்தீங்க?
கீர்த்தி ஒகே ன்னு சொன்னதும், உங்களுக்கு ஏன் உயிர் போற மாதிரி இருந்துச்சு ?

அவனுடைய கேள்விகளுக்கும் அவளுடைய செய்ல்களுக்கும் விடை அப்போது தான் அவளுக்கே புரிந்தது (நம்மை போலவே). வசமாக மாட்டிக் கொண்ட களவானி யைப் போல் ஆகிவிட்டது அவளின் நிலை. மெளனத்தை மட்டுமே பதிலாய் தர முடிந்தது அவளால்.

இப்ப புரியுதா, நான் ஏன் சஸ்பென்ஸ் வச்சேன்னு?
சரி,
உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா . . . .?


(ஆரம்பம்)