Saturday, October 02, 2010

எந்திரன் - ரஜினி Unlimited

கேமரா போகிற போக்கில் தலைவரை காட்டுகிறார்கள், அதைப் பற்றியெல்லாம் நம்மை சிந்திக்க வைக்காமல் எப்போ ரோபோ தயாராகும் என்ற ஆவல் நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

அசாத்திய திறமையும் அறிவும் கொண்ட ரோபா ரஜினி தயாராக ஆட்டம் ஆரம்பமாகிறது. கலகலப்பாகவும் விருவிருப்பாகவும் நகரும் திரைக்கதை. டெலி போன் டைரக்டரி தேடல் முதல் பிரசவம் பார்ப்பது வரை ஆச்சர்யப்படுத்துகிறார் ரோபோ ரஜினி. காமெடி, சண்டை, காதல் என்று எல்லாம் உண்டு விஞ்ஞான பின் புலத்துடன்.

இடைவேளைக்கு பிறகு வரும் நூற்று சொச்சம் ரோபோ ரஜினிகள் அதகளம். ரஜினி ரசிகர்களுக்கு Unlimited விருந்து.

என்னதான் Hi-tech கருவி என்றாலும் மின்சாரம் இல்லாமல் வேலைக்கு ஆகாது, அதுபோல் படத்தின் எல்லாருடைய உழைப்புக்கும் அறிவுக்கும் ரஜினி மின்சாரம் என்று சொனால் மிகையாகாது. ரஜினிக்கு பதிலாக வேறு யாராவது நடித்திருந்தால், கிட்டத்தட்ட பீஸ் போன பல்பாகியிருக்கும்.

படத்தில் வேலை பார்த்த அனைவரும் அசாத்திய உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் Hats Off.

சுஜாதா - we miss you

Wednesday, April 15, 2009

ஐடி மக்கள் அன்றும் இன்றும்

அன்று

ஹலோ,

என்னடா உயிரோடதான் இருக்கியா?

இல்லடா, வேல ஜாஸ்திடா! வீட்டுக்கு தூங்க மட்டும் தான் வற்றேன். உனக்கு எப்டி டா இருக்கு.

ஒரு மாசமா பென்ச்ல இருக்கண்டா!

ஜாலியா பெஞ்ல இருக்க. என்ன பாரு, வேல முழி பிதுங்குது. கொடுத்து வச்சவண்டா நீ. பார்த்து இப்பவே கல்யானத்த முடிச்சுடு, லைப்ப ஜாலியா என்ஜாய் பண்ணு.இன்று

ஹலோ

என்னடா உயிரோடதான் இருக்கியா?

இல்லடா, வேல ஜாஸ்திடா! வீட்டுக்கு தூங்க மட்டும் தான் வற்றேன். உனக்கு எப்டி டா இருக்கு.

ஜாலியா இருக்க. என்ன பாரு, முழி பிதுங்குது, கொடுத்து வச்சவண்டா நீ ப்ராஜக்ட் ல இருக்க. நான் ஒரு மாசமா பென்ச்ல இருக்கண்டா! எப்ப என்ன நடக்கும்னு தெரியலடா. செஞ்சுகிட்டிருந்த ப்ராஜக்ட் கூட நிப்பாட்டிடாஙக, ரொம்ப பயமா இருக்குடா.

----------------

கண் இமைக்கும் நொடியில்
எதுவும் நடக்கும்.
இது எனக்குத் தெரியும்
நாளை உனக்குப் புரியும்.
- சந்திரமுகி பாடல் (அ . . அ. . . அண்ணனோட பாட்டு. . . .)

Tuesday, April 07, 2009

சாண்டில்யனின் ராஜபேரிகை

பெரும்பாலான வரலாற்று நாவல்களில் சில முக்கிய கதா பாத்திரங்கள் வரலாற்று நாயகர்களாகவும், மற்ற பாத்திரங்கள் ஆசிரியரின் விருப்பத்திற்கும் கதைக்கும் தேவைப் பட்ட கற்பனை கதா பாத்திரங்களாகவும் இருப்பர். வரலாற்றில் நடந்த முக்கிய போர்களையும் சில குறிப்புகளையும் வைத்தே எல்லா நாவல்களும் புனையப்பட்டிருக்கும். சாண்டில்யனின் ராஜ பேரிகை அப்படிப்பட்ட வரலாற்று நாவல்களைப் போல் அல்லாமல் சற்றே வித்தியாசமானது.எல்லா வளப்பங்களும் உடைய இந்தப் பாரத பூமி, சந்திரகுப்தன், அசோகன் போன்ற ஏகசக்ராதிபதிகளையும், ரணா பிரதாப்சிங், சிவாஜி போன்ற சிறந்த வீரர்களையும் பெற்றிருந்த இந்தப் பெரிய புண்ணிய பூமி, ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஆங்கிலேயரிடம் எப்படி அடிமைப்பட்டது? வியாபாரிகளாக இங்கு வந்த ஒரு சிறு கூட்டத்தால் இங்கு எப்படிப் பெரிய சாம்ராஜ்யத்தை அமைக்க முடிந்தது? இப்படி இப்படி யெல்லாம் நினைத்தேன். அதனால் அதைப் பற்றி ஆராய்ச்சியிலும் இறங்கினேன். அந்த ஆராய்ச்சியின் விளைவுதான் “ராஜ பேரிகை”

- சாண்டில்யனின் முன்னுரை ராஜ பேரிக புத்தகத்தில் இருந்து.


புத்தகத்தின் கதையை நான் சொல்லப் போவதில்லை, சில கதாபாத்திரங்கள் பற்றிய அறிமுகமும் புத்தகத்தை பற்றிய என் என்னங்களும் அனுபவங்களையும் மட்டுமே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

கதைக் களம்: வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், தங்களுடைய காலனியாதிக்கத்திற்கு அஸ்த்திவாரம் இட்ட தருனங்கள் தான் கதைக் களம். இந்திய அரசுகளுக்குள் அச்சமயம் இருந்த பகைமையை லாவகமா பிரென்ச் மற்றும் பிட்டிஷ் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கு உதவுவது போல் களத்தில் இறங்கின. பிரிட்டிஷ் அணி போரில் வென்று விட பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இங்கு துளிர் விட ஆரம்பித்தது.

கதை மாந்தர்கள்: பெரும்பாலான கதாபாத்திரஙகள் வரலாற்று மாந்தர்களே. ராபர்ட் கிளைவ், ராஜா பிரதாப் சிங், மானாஜி அப்பா, முராரிராவ், சந்தாசாகிப், முகமது அலி, கேப்டன் ஜின்ஜின்ஸ், கேப்டன் டால்டன், மேஜர் லாரன்ஸ், கவர்னர் ஸாண்டர்ஸ், ப்ரென்ச் கவர்னர் டூப்ளே, டிபுஸ்ஸி என்று எங்கும் வரலாற்று மாந்தர்களே எந்தப் பக்கம் திரும்பினாலும் நிற்கிறார்கள். விஜயகுமாரன், ராஜா பிராப் சிங் மகள் நந்தினி போன்ற சில கற்பனை பாத்திரங்களும் உண்டு.

தேவிக் கோட்டையின் மீதான பிரிட்டிஷாரின் படை எடுப்பு முதல், ஆங்கிலேயர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெளிவாக சொல்லப் பட்டிருக்கின்றன. பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளை தேர்ந்தெடுத்து, கதையை நகர்த்தி இருக்கும் சாண்டில்யனின் திறமை அபாரமானது. பல நிகழ்வுகளும், சம்பாஷனைகளும் ஆங்கிலேயர்கள் பலர் எழுதிய புத்தகத்தில் இருந்தே எடுத்தாளப் பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்களின் எல்லா போர் நடவடிக்கைகளும் வருடம் தேதி வாரியாக விவரிக்கப் பட்டிருக்கிறது. எல்லா விஷயங்களும் கதை ஒட்டத்திலேயே வருவதால் கதையின் சுவாரஸ்யம் அதிகமாகிறது.

வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் எளிதாக இருக்கும் வகையில், பல நிகழ்வுகள் குறித்த செய்திகளையும் அது எந்த புத்தகத்தில் இருந்து திரட்டப்பட்டது என்ற விபரங்களையும் தந்துள்ளார் ஆசிரியர்.

* பிரிட்டிஷ் மற்றும் ப்ரென்ச் படையில் அதிகமாக நம் நாட்டவர்களே இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

* தொலை நோக்கு பார்வை மற்றும் மற்ற அரசுகளுடன் ஒற்றுமை இல்லாது முட்டாள் தனமாக ப்ரென்ச் மற்றும் ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்த இந்திய அரசுகள் தான் நம்முடைய அடிமை தனத்திற்கு வித்திட்டவர்கள் என்று தெளிவாக புரிந்தது.

* வெள்ளையர்களுக்கு அவர்கள் நாட்டின் மீது இருந்த காதலும், அவர்களின் அர்பனிப்பும் தான் அவர்களை இங்கே வேரூன்ற வைத்திருக்கிறது என்ற உண்மையை அழகாக உணர்த்துகிறது.

* விஜயகுமாரன் நந்தினியின் காதல் லீலைகள் அவ்வப்போது கிளுகிளுப்பு தருகின்றது.

* கடைசி அத்தியாயங்களில் ஆவியாக வரும், விஜயகுமாரனின் அம்மாவின் கதாபாத்திரம் ஏன் என்றே தெரியவில்லை. அந்த ஒரு விஷயம் மட்டும் சிறு குறையாகவே எனக்குப் படுகிறது.

ஆறு மாத காலம் உழைத்து, பல்வேறு புத்தகங்களை படித்து அழகான இந்த நாவலை நமக்கு அளித்த சாண்டில்யனுக்கு என் நன்றிகள்.

Thursday, March 26, 2009

உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா . . . ?

உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா . . . .

கீர்த்தி, குடித்துக் கொண்டிருந்த காபி கொப்பளிக்க பலமாக சிரித்து விட்டு திருப்பிக் கேட்டாள் "உனக்கு தெரியாதா ?"

தெரியும், இல்ல மாப்ள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா ?

ம்ம்.

எப்பிடி எதிர்பார்க்கிறாங்க உங்க வீட்ல, ஜாதி ஜாதகம் எல்லாம் பார்ப்பாங்களா? இல்ல உங்க ரிலேசன் ல பார்க்குறாங்களா?
(நித்யா கொஞ்சம் சீரியசாகவே அவளிடம் கேட்டாள்)

நல்ல பையன், நம்பிக்கையான குடும்பமா இருந்தா போதும்.
கண்டிப்பா வெஜிடேரியனா இருக்கணும் அவ்வளவு தான்.
என்ன ஆச்சு, ஐடி டவுன் ஆனதால தொழில மாத்தி கிட்டியா ?

இல்ல சும்மா தான் கேட்டேன்

பொய் சொல்லாத, என்ன மேட்டர்னு சொல்லு.

இல்ல விஜய் தான் இந்த விபரமெல்லாம் கேட்டாரு.

விஜயா ? (அவள் தொனியில் ஆச்சர்யம் நிரம்பி வழிந்தது)

உனக்கு ஏதாவது விஜய் மேல . . . . .? (என்று லேசாக இழுத்தாள் நித்யா)

அப்படி ஒன்னும் கிடையாது (சட்டென்று பதில் வந்தது கீர்த்தியிடமிருந்து)

உன் கிட்ட புரோபோஸ் பண்ணா ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் சொல்லிடாத? நானே கேட்டேன் என்ன விஷயம்னு, உன் கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னாரு.
"நான் கேட்டதா சொல்ல வேணாம், நீங்களா கேக்குற மாதிரி கேட்டு சொல்லுங்க . . . . " ன்னு சொன்னாரு. அப்புறம் இந்த விஷயம் உனக்கு தெரியாத மாதிரியே காட்டிக்க. . .

ஹர்ட் பண்ற மாதிரி ஒன்னும் சொல்ல மாட்டேன். அவரும் டிசண்டா தான் கேப்பாரு, நானும் டிசண்டா முடியாது ன்னு சொல்ல போறேன், அவ்ளோதான். என்று கண்களை சிமிட்டியவாரே அவளுடைய வழக்கமான புன்னகையை உதிர்த்தாள் கீர்த்தி.

------------------- மறு நாள் -------------------

மெசஞ்சரில் விஜயும் கீர்த்தியும்

Vijay : Coffee ?
Keerthi : Its 7 now, I am going to leave now.
Vijay : I want to talk to to something, please come
Keerthi : k, can we start ?
Vijay : okye. . . .

விஜய்யும் கீர்த்தியும் ஒன்றாக கிளம்பியதை நித்யா கவனித்தாள்.

pantry காலியாக இருந்தது

எதற்காக விஜய் அழைத்திருக்கலாம் என்று முன்பே யூகித்திருந்ததால், அவளுடைய பதில் தயாராகவே இருந்தது. அவன் முதலில் பேசட்டும் என்று அமைதியாகவே இருந்தாள் கீர்த்தி. விஜையே ஆரம்பித்தான்,

அப்புறம் மாப்ள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கு.

(லேசாக புன்னகைத்தாள்)

இல்ல, எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான், உங்களுக்கும் அவனுக்கும் நல்ல பொருத்தம் இருக்கும். குடும்பமும் நல்ல குடும்பம். என்ன சொல்றிங்க? உங்க வீட்லயும், அவங்க வீட்லயும் பேசி பார்க்கலாமா?

(எவ்ளோ பெரிய bug, issue வந்தாலும் அழகாக அதை சரி செய்து client யும் manager யும் சமாளித்து விடும் அவன் தந்திரம் இங்கும் வேலை செய்வதை உணர்ந்தாள்)

எங்க வீட்ல வெஜிடேரியன் ல தான் பார்க்குறாங்க?

அவனும் சைவம் தான்.

(சற்றே குழப்ப மடைந்தாள், வெள்ளிக் கிழமைன்னா பிரியாணி சாப்பிடற ஆளாச்சே விஜய், கொஞ்சம் கலவரம் நிறைந்த கண்களுடனும் மனதுடனும் அவனை பார்த்தாள்)

இல்ல என் பிரண்டுக்கு பொண்ணு பாக்குறாங்க, உங்களுக்கும் அவனுக்கும் பொருத்தமா இருக்கும் ன்னு தோணிச்சி, அதான் கேட்டேன்.

உங்க பிரண்டு என்ன லவ் பண்றாரா?

இல்ல, அவன் உங்கள பார்த்தது கூட இல்ல. . . .

(அவள் எதையோ எதிர் பார்த்து பதில் சொல்ல தயாராயிருக்க, அவனோ வித்தியாசமாய் ஒன்றை சொல்ல அவளது குழப்பங்கள் இன்னும் அதிகமாகின. கண்களை மூடி நடந்ததை மெல்ல அசை போட்டாள். எல்லா விஷயங்களும் அவளுக்கு தெளிவாய் புரிந்தவுடன் கேட்டாள். . . )

உங்க பிரண்டுக்கு நீங்க பொண்ணு பாக்குறீங்க?

மெதுவாக தலை அசைத்தான் ஆமாம் என்று.

ஏன்? என்னை?

(அந்தச் சூழ்நிலையில், மனத்தில் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் இரண்டு வார்த்தைகள் மட்டும் அவளிடமிருந்து வந்தது, எல்லா கேள்விகளையும் சுமந்து)

உங்க way of thinking அப்புறம் behaviour எல்லாம் அவன மாதிரியும் அவங்க family மாதிரியே இருக்கு, அதான் உங்களுக்கும் அவனுக்கும் பொருத்தமா இருக்கும். அவன்கிட்ட உங்கள பத்தியும் இந்த விஷயத்த பத்தியும் சொன்னேன், உங்க கிட்ட பேசிட்டு சொல்ல சொன்னான். யோசிச்சி பாருங்க, உங்க அப்பா அம்மா கிட்ட பேசுங்க அப்புறம் சொல்லுங்க. . . . . .

சரி. . . (கொஞ்சம் நிதானித்து விட்டு பிறகு கேட்டாள். . . .)

உங்க பிரண்டு ஸ்மார்ட்டா இருப்பாரா ?

ஆங். . . ஏன் அளவுக்கு இல்லேன்னாலும், கொஞ்சம் சுமாரா இருப்பான். (என்று நக்கலாக சிரித்தான்)

------------------- இரவு 11.30 மணி -------------------

Nithya calling. . . . .

10 மிஸ்டு கால் ஆகிவிட்டது, பாவம் என்று பதினோராவது முறையாக வந்த அழைப்பை அட்டன் செய்தான்.

என்ன சார், பிரண்டுக்கு பொண்ணு பார்த்தாச்சா? பெரிய மனுஷனா ஆயிட்டிங்க. . .

ம்ம். . . .

இத என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல? நேத்து ராத்திரி துக்கமே இல்ல. நீங்க கீர்த்திய லவ் பண்றிங்கன்னு நினைச்சு பயந்து போயிட்டேன். இப்ப அவளுக்கு கால் பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்டா, அப்பா அம்மா கிட்ட பேசிட்டு தான் சொல்லணும், எனக்கு 90% ஒக்கே ன்னு சொன்னா. எனக்கு உயிரே போயிடுச்சு. அப்புறம் தான் எல்லாத்தையும் சொன்னா.

(பட பட வென்று அவளிடமிருந்து வார்த்தைகள் உதிர்ந்து கொண்டே இருந்தது அவளிடமிருந்து. லேசான புன்னகையுடன் மறு முனையில் கேட்டுக் கொண்டிருந்தான் விஜய்.)

ஏன் இப்படி சஸ்பென்ஸ் வச்சிங்க, சொல்லுங்க என்று முடித்தாள்.

நீங்க ஏன் நேத்து ராத்திரி துங்கல?
நான் கீர்த்திய லவ் பண்றதா நினைச்சு நீங்க ஏன் பயந்தீங்க?
கீர்த்தி ஒகே ன்னு சொன்னதும், உங்களுக்கு ஏன் உயிர் போற மாதிரி இருந்துச்சு ?

அவனுடைய கேள்விகளுக்கும் அவளுடைய செய்ல்களுக்கும் விடை அப்போது தான் அவளுக்கே புரிந்தது (நம்மை போலவே). வசமாக மாட்டிக் கொண்ட களவானி யைப் போல் ஆகிவிட்டது அவளின் நிலை. மெளனத்தை மட்டுமே பதிலாய் தர முடிந்தது அவளால்.

இப்ப புரியுதா, நான் ஏன் சஸ்பென்ஸ் வச்சேன்னு?
சரி,
உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா . . . .?


(ஆரம்பம்)

Monday, September 15, 2008

தே.மு.தி.க பாஸ்டன்(அமெரிக்கா) கொ.ப.செ


இவரு தான் நம்மா கேப்டன் விஜயகாந்த் கட்சிய பத்தி அமெரிக்கா வுல பரப்பிகிட்டு இருக்காரு.... 


அவர் பதிவு இங்கிலீபீசுல இருக்கும் கோச்சுக்காதீங்க. . .

Tuesday, August 05, 2008

நித்யா, எனக்கு பயமா இருக்கு

நித்யா, எனக்கு பயமா இருக்கு

ஏன். . .

இல்ல, அந்த பொண்ணு என்ன புடிக்கலன்னு சொல்லிட்டா. . .

அந்தப் பொண்ணுக்கு உன்ன தெரியுமா?

தெரியும்னு தான் நினைக்கிறேன்.

அப்புறம் என்ன, உனக்கு என்ன குறைச்சல், அப்படி அவ புடிக்கலைன்னு சொல்லிட்டா, அவ அதிர்ஷ்டம் அவ்வளவுதான். நாம என்ன பண்ண முடியும்?

என் அதிர்ஷ்டமும் அவ்வளவுதான்.

சீ, தைரியமா போய் உன் லவ்வ சொல்லு. உன்ன புடிக்காதுன்னு எந்த பொண்ணாவது சொல்லுவாளா?

ஆமா என்ன எல்லா பொண்ணுங்களுக்கும் புடிக்கும். ரொம்ம ஓட்டாதா, நானே டென்ஷன்ல இருக்கேன்.

நிஜமா தான் சொல்றேன்.

பொய் சொல்லாத. இப்ப நான் உன்ன லவ் பண்றன்னு சொன்னா உடனே ஒத்துக்குவியா? சொல்லு?

(விஜய் கடைசியாக கேட்டதை மட்டும் சொல்லி இருந்தால் கண்டிப்பாக சந்தோஷப்பட்டிருப்பாள். ஆனால் நேற்று இதே நேரம் தான் விஜய் தான் ஒரு பெண்ணை

காதலிப்பதாகவும் அவளிடம் சீக்கிரம் விஷயத்தை சொல்ல வேண்டும் என்றும் சொன்னான். விஜய் தனக்கு தெரியாமல் எதையும் செய்ய மாட்டான் என்று நினைத்தவளுக்கு

இது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. விஜய் மீதான தன் காதல் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று அவள் நினைக்கவில்லை.)

பாத்தியா, அமைதியா இருக்க. மூனு வருஷமா ஒன்னா வேல பாக்குறோம், நீயே யோசிக்கிற அப்புறம் அந்த பொண்ணு எப்படி ஒத்துக்கும். சொல்லு புடிக்கலன்னாவது சொல்லு.

இல்ல எனக்கு புடிச்சிருக்குன்னு தான் சொல்லுவேன்.

நிஜமா?

ம்ம்...., அந்த பொண்ணு கிட்ட பேசிட்டு, என்ன சொன்னான்னு அப்பறமா சொல்லு. என்று சொல்லிவிட்டு இருந்து வேகமாக எழுந்தாள்.

ஏய், என்ன அவசரம் உட்காரு. அந்த் பொண்ணு என்ன சொன்னானு சொல்றேன். அந்த பொண்ணு என்ன புடிச்சிருக்குன்னு சொன்னா.

எப்ப சொன்னா...

இப்பதான் சொன்னா, என்று குறும்பாக அவளைப் பார்த்து சிரித்தான்.

அவள் இதழ்களில் புன்னகை வருவதற்கு முன், கண்களில் கண்ணீர் எட்டிப் பார்தத்து.

Tuesday, July 08, 2008

உடையாரும் அடையாரும்

பாலகுமாரன் புத்தகங்கள் எதையும் நான் படித்தது கிடையாது. இது வரை நான் படித்த அத்தனை சரித்திர நாவல்களும் என்னை ஏமாற்றியதில்லை. கல்கி, சாடில்யன், அகிலனைப் போல் பாலகுமாரனும் என்னை ஏமாற்ற மாட்டார் என்று தான் நினைத்தேன். கடைசியில் ஏமாற்றிவிட்டார்.

தஞ்சை பெரிய கோவிலை கட்டுவது தான் கதை. தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்குண்டான வரைபடங்கள் வந்து சேருகிறது என்று உடையார் ஆரம்பமாகிறது. கதை ராஜராஜ சோழரையும், ராஜேந்திர சோழரையும், பெரிய கோவில் மட்டுமல்லாது தஞ்சைத் தரணி மக்களையும் மையமாக வைத்து கதை நகருகிறது. பொதுவாகவே வரலாற்று நாவல்களில் வரும் அரசரைப் பற்றிய வர்னனைகளும் அரண்மனை கோட்டை கொத்தளங்களை பற்றிய விளக்கங்களும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இலை மறை காயாக சொல்லப்படும் விஷய்ங்கள் தான் வாசகனின் கற்பனையை வளர்க்கும். ஆனால் உடையாரில் அப்படி இல்லாமல், எல்லா விஷயங்களையும் வர்னனை செய்து அலுப்பை மட்டுமே ஏற்படுத்துகிறார் ஆசிரியர். கதை, திருப்பங்கள், ரகசியங்கள், எதிர்பார்ப்புகள் என்று இல்லாது சம்பவங்கள், ஜாதிப் பிரச்சனைகள், பொறாமை என்று ஆறு பாகங்கள் வரை போகிறது.

ஜாதிகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளும் சண்டைகளும் அன்று இருந்ததற்கான ஆதாரம் கிடையாது, அது பற்றி முழுமையாகவும் யாருக்கும் தெரியாத போது, பெரும்பாலான சம்பவங்கள் சாதிச் சண்டைளும், போட்டி, பொறாமையாகவும் இருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது. சோழர்கள் காலத்தில் போட்டி பொறாமை மட்டும் தான் இருந்ததா என்ற சந்தேகம் கூட எழுகிறது.

கதையில், கோவில் கட்டுவதற்கு எங்கு கல் எங்கு எடுப்பது என்று முடிவு செய்யும் முன்பே, சிலை செய்வதற்கு மாதிரியாக தாசிப் பெண்டுகள் தஞ்சைக்கு வந்து விடுகிறார்கள். கதை சிற்பிகளை சுற்றி நடைபெறுவதை விட தாசிப் பெண்களையே அதிகம் சுற்றி வருவது போல் இருக்கிறது.
விலையும் அதிகம் தான், அங்கங்கே வரும் எழுத்துப் பிழைகளும் அதிகம். முற்றுப் புள்ளி எங்கே இருக்க வேண்டும் என்ற குழப்பம் நம்க்கே வந்து விடுகிறது. சில அத்தியாயங்கள் நீண்டு கொண்டே போகிறது, சில உடன் முடிந்து விடுகிறது. புத்தகங்கள் அச்சிடுவதிலேயே பல குழப்பங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

உடையார் படித்துவிட்டு, அதில் சொல்லப் பட்டிருப்பது தான், சோழர் காலத்து வாழ்க்கை முறை என்று யாரும் எண்ண வேண்டாம். உடையாரில் சொல்லப் பட்ட மக்களின் வாழ்க்கை முறை சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் ஆசிரியரின் கற்பனை. அதுமட்டுமல்லாது நீங்கள் புதிதாகவோ அரிதாகவோ வரலாற்று நாவல் படிப்பவரென்றால், உடையார் உங்களுக்கானதல்ல. என்னை போலவும் விக்னேஷ்வரனைப் போலவும் வராலாற்று நாவலகளில் பித்து பிடித்து திரிபவர்களால் மட்டுமே படிக்க முடியும்.

உடையார் என்ற அடைமொழியை பொன்னியின் செல்வனில் எங்கேயும் காணமுடியாது, வேங்கையின் மைந்தனிலும் சில இடங்களில் மட்டுமே கான முடியும், அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. அதைப் பற்றியும் அதிகமாக ஆசிரியர் விளக்க வில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

இது புத்தக விமர்சனம் இல்லை, உடையாரும் என் எண்ணங்களும் கேள்விகளும் அவ்வளவே. . .

ஏன் இந்த தலைப்பு என்கிறீர்களா? தினமும் அலுவலகம் செல்லும் வழியில் இருப்பது அடையார், கையில் இருப்பது உடையார். இரண்டும் என்னை என்னைப் பெரிதாக பாதிக்க வில்லை.