Thursday, December 28, 2006

3 மாணவர்களும், 50 மாணவிகளும் ஒரு வகுப்பில்.

கல்லூரி எல்லோருக்கும் மறக்க முடியாத பல அனுபவங்களை தந்திருக்கும், அது போல் எனக்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவங்களில் இதுவும் ஒன்று. நல்ல வேளையாக 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கவில்லை அதனால் B.E சேர வாய்ப்பில்லாமல் போனது. B.Sc(I.T) என்று நான் முடிவு செய்தேன், தஞ்சையில் உள்ள பிரபல கல்லூரி, என்று என் தந்தை முடிவு செய்தார். காரணம் அங்கு படித்தால் நல்ல மதிப்பெண்கள் வாங்கலாம் என்று நினைத்தார். மதிப்பெண்கள் மட்டும் தான் வாங்க முடியும் என்பது எங்களுக்கு அப்போது தெரியாமல் போய்விட்டது, பிறகென்ன அங்கு படித்து தெரிந்து கொண்டோம்.

முதல் நாள் வகுப்பு என்பதால் வெகு சீக்கிரமாகவே 9 மணி கல்லூரிக்கு 8 மணிக்கே சென்று விட்டேன். கல்லூரியில் என்னையும் வாயிற் காவலரையும் தவிர வேறு யாரும் இல்லை. இருந்த மூன்று தளங்களையும் சும்மா சுற்றி விட்டு, எங்கள் வகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று அமர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை, ஏதோ ஒரு புதிய அனுபவத்திற்காக காத்திருந்த சந்தோஷமும், படபடப்பும் மனதில் இருந்தது. 8.30 மணி இருக்கும் ஒரு பெண் அறையில் நுழைந்தாள், எங்கோ பார்த்தது போல் தெரிந்தது. சரி பிறகு தெரிந்து கொள்ளலாம் என்று பேசாமல் இருந்து விட்டேன். சிறிது நேரத்திற்கெல்லாம் இரண்டு பையன்கள் வகுப்பிற்குள் வர, வழக்கமான உரையாடல்கள் தொடர்ந்தது. கல்லூரிப் பேருந்துகள் வந்ததும் கல்லூரி நிறம்பியது, எங்கள் வகுப்பையும் சேர்த்து.

வகுப்பிற்குள் நுழைந்த எல்லா புதிய முகங்களும் பெண்கள் முகமாகவே இருந்தது. எங்கள் மூவரைத் தவிர வேறு பையன்களே இல்லை, வகுப்பறை பெணகளால் நிறம்பியது. கிட்டத்தட்ட 50 மாணவிகளும் 3 மாணவர்களும், ஆரம்பத்தில் இருந்த சந்தோஷம எந்த வழியே போனதென்று தெரியவில்லை. நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் சற்று தயக்கதுடனேயே பார்த்துக் கொண்டோம். என்னடா இது வசமா வந்து சிக்கி கிட்டோமே, இன்னும் 3 வருசம் எப்படி தள்றதுன்னு தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தோம்.

இந்த சமயம் அந்த கல்லூரியைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும், ஒரு நல்ல கல்லூரி என்று பெயர் வாங்க வேண்டும் என்பதே அவர்களின் ஆசை. கவனிக்கவும் பெயர் வாங்க வேண்டும் என்பதே தவிர நல்ல கல்லூரியாக ஆக வேண்டும் என்பதல்ல. அங்கு படிக்கும் மாணவர்கள் பல்கலைக் கழக் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், அதுதான் அவர்களது முதல் லட்சியம். கல்லூரி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறாத மாணவர்களுக்கு Hall Ticket வழங்காமல் அவர்களை தேர்வு எழுதாமல் செய்து விடுவார்கள். Letter Writing Exerciseல் போலீஸ் ஸ்டேசனுக்கு சைக்கிள் திருட்டுப்போன விஷயம் தொடர்பாக கொடுக்கும் புகாரை கூட மாணவர்கள் சொந்தமாக எழுதக்கூடாது, ஆங்கில ஆசிரியர் கொடுத்த Print Outல் உள்ளதைத்தான் எழுத வேண்டும். Comprehension Exerciseஐ மனப்பாடம் செய்ய எங்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுத்த வழியை சொன்னால், சிரிப்பு தான் வரும். என்ன சார் இப்படி மனப்பாடம் செய்ய சொல்றீங்க, சொந்தமாதான புரிஞ்சு நம்மாளா தான செய்யனும்னு நான் கேட்டதற்கு'அப்புறம் நீ பரீட்சையில பெயில் ஆயிடுவ' என்று பதில் சொன்னார். இப்படி படிச்சா, வாழ்க்கையில பெயில் ஆயிடுவேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு பேசாமல் அமர்ந்து விட்டேன்.

சரி நம்ம வகுப்புல என்ன நடந்ததுன்னு பார்ப்போம். பத்தாம் வகுப்பு வரை ஆண்கள் வகுப்பிலேயே படித்து விட்டு, +1,+2 ல 36 மாணவர்களில் 5 பெண்கள்னு படிச்ச எனக்கு அப்போது, ரோலர் கோஸ்டர்ல போயிக்கிட்டு இருக்கிற மாதிரி இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் ஆசிரியர் உள்ளே வந்தார். Pricipals of Information Technology பேப்பர் சிலபஸ் கொடுத்துட்டு பாடத்தை ஆரம்பித்தார். வருகைப் பதிவேடு வந்து சேர்ந்தது, வரிசையாக எல்லோர் பேரையும் ஆசிரியர் அழைத்தார். ஆனால் . . . . . . எங்கள் மூன்று பேர் பேர்கள் மட்டும் மிஸ்ஸிங். ஆசிரியர் சற்றே குழம்பிப் போய், மேனேஜரை அழைத்தார். எங்கள் கடிதங்களை பார்த்து விட்டு, உங்களுக்கு கல்லூரி 1-5 shift. போயிட்டு 1மணி shiftக்கு வாங்க என்றார் மேனேஜர் (கல்லூரி அப்போது 9-1 ஒரு Shiftம் 1-5 ஒரு Shiftம் நடந்தது).

மூவரும் வகுப்பை விட்டு வெளியே வந்தோம், மதியம் வரை கல்லூரிக்கு வெளியே சுற்றி விட்டு மதிய வகுப்பில் சென்று அமர்ந்தோம் . . . . . . . .


(தொடரலாம் என்று நினைக்கிறேன்)

Monday, December 18, 2006

தேவர் சமுதாயத்தை இழிவு படுத்தினாரா ரஜினி ?

பத்திரிக்கைகளில் இந்த விஷயம் வெளியான போது, எனக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. தேன்கூடு வலை தளத்திற்கு சென்ற போது, அதிகம் பார்வை இட்டவை பகுதியில் இந்த விஷயம் முதலில் இருந்தது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சரி அப்படி என்ன தான் செய்து விட்டார் ரஜினி என்று தெரிந்து கொள்ள குமுதம் வலை தளத்திற்கு முதல் முறையாக சென்றேன்.

அந்த விஷயத்தை படித்ததும் எனக்கு சிரிப்பும், கோபமுதான் வந்தது, குமுதம் மீதும் சேதுராமன் மீதும்

விழாவில் ரஜினி பேசியது இது தான்.
-----------------------------------------------------------------------------------

டைரக்டர் பாலசந்தர் படத்தில் நடித்தபோது பயந்தேன். ஷாட் ஓ.கே. ஆகுமா என்கிற தவிப்பு எனக்குள் இருக்கும். அவர் படங்களில் நடித்து 30 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சிவாஜியில் நடிக்கும்போதும் அதே பயம் இருக்கிறது. ஷாட் ஓ.கே. ஆகுமா, ஷங்கர் ஏத்துக்கிட்டாரா என்றெல்லாம் யோசிக்கிறேன்.

இதில் விவேக்கும் என்னோடு நடிக்கிறார். சிவாஜி ரிலீசுக்கு பிறகுதான் விழாக்களில் கலந்துக்கணும் என்று முடிவு எடுத்திருந்தேன். விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். சில விஷயங்களுக்கு விதிவிலக்கு உண்டு. இந்த விழாவையும் விதிவிலக்கா கருதி கலந்துக்க சம்மதித்தேன்.

`வீரா‘ படத்தில் விவேக் என்னோடு நடித்தார். அப்ப அவர் சின்ன பையன் மாதிரி இருந்தார். வசனம் நல்லா பேசினார். திறமைசாலி. அதன் பிறகு இப்போது `சிவாஜி’யில் முழு படத்திலும் விவேக்குடன் நடிக்கிறேன். எனக்கு ஷாட் முடிந்ததும் விவேக்குக்கிட்டே போய் உட்கார்ந்து பேசிக்கிட்டே இருப்பேன். அவர் மிகப்பெரிய அறிவாளி. விஞ்ஞானம், கம்ப்ïட்டர், வரலாறு, புவியியல் என்று எல்லாவற்றையும் தெரிஞ்சி வச்சிருக்கார்.

எனக்கு ஜாதி மீது நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தா தான் மதிப்பாëங்க. இல்லாட்டி ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவாங்க.

இந்தந்த ஜாதிக்காரங்க இப்படி இடிப்பத்தான் இருப்பாங்கன்னும் சொல்லி வச்சிருக்காங்க. தலித்துகள் இப்படித்தான் இருப்பார் கள். ரெட்டியார்கள், பிராம ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. பாலசந்தர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர். எல்லார்கிட்டேயும் நல்லா பழகுவார்.

விவேக்குடன் சூட்டிங் போகும்போது அறிவாளியா பேசுவார். லைப்ரரி, புத்தகங்கள் என்றுதான் இருப்பார். சிந்தனையாளர். நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது. அதன் பிறகுதான் தேவர் என்று புரிந்தது.

புகழின் உச்சியில் இருந்தாலும் ஒரே மாதிரி இருக்கணும். புகழ் ஆயிரம் கிலோ பாறை மாதிரி. அதை `பேலன்ஸ்’ ஆக வச்சிக்கணும். கொஞ்சம் ஆடினால் காலில் விழுந்து விடும். விவேக் கதாநாயகனாக நடித்த இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

----------------------------------------------------------------------------------

இதில் ரஜினி தேவர் சமுதாயத்தை எப்படி இழிவு படுத்தினார். நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது என்று தானே சொன்னார், அவர் புத்திசாலி தனத்தை வைத்து அவர் பிராமணர் என்று நினைத்தேன் என்று சொன்னாரா . . ?


எனக்கு ஜாதி மீது நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தா தான் மதிப்பாëங்க. இல்லாட்டி ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவாங்க. இது கரெட்டு தானுங்களேஇந்தந்த ஜாதிக்காரங்க இப்படி இடிப்பத்தான் இருப்பாங்கன்னும் சொல்லி வச்சிருக்காங்க. தலித்துகள் இப்படித்தான் இருப்பார் கள். ரெட்டியார்கள், பிராம ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது
இது சேதுராமன் அவர்கள் காதிலோ அல்லது குமுதம் ஆசிரியர் காதிலோ விழவில்லையா . . . ?

தன் குணத்தாலும் திறமையாலும் உயர்ந்து நிற்பவர்களை புகழ்ந்தோ, இகழ்ந்தோ பிழைப்பது இந்த பத்திரிக்கைகளுக்கு பிழைப்பாகி விட்டது.

என் கல்லூரியிலும், பள்ளியிலும் நடந்த சில விஷயங்கள் எனக்கு நியாபகம் வருகிறது

நான் கல்லூரியில் படிக்கும் போது நடந்த விஷயம்.

வெங்கட்ராமா, உங்க கிளாசில் இருக்கற நம்மவா பேரெல்லாம் லிஸ்ட் எடுத்து கொடு, காஞ்சிபுரத்துல நடக்குற யாகத்துக்கு போகனும் என்று பக்கத்து கிளாஸ் பையன் சிவகுமார் சொல்ல, எனக்கு யார் யாரெல்லாம் அவான்னு தெரியாது, ஏன்னா நான் உங்கவா இல்ல என்று நான் சொல்ல, சிரித்துக் கொண்டே சாரி சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

நணபர்களிடம் இந்த விஷயத்தை சொல்ல, ஒரே சிரிப்பு தான்.

அதே போல் பள்ளியிலும்,

ஐயர் வீட்டு கல்யாணத்துல, கல்யாணத்துக்கு முதல் நாள் தான் ரொம்ப கிராண்டா இருக்கும்,
என்னடா வெங்கட்ராமா . . ?, என்று ஆசிரியர் சொல்ல, எனக்கு தெரியாது சார் நான் ஐயர் கிடையாது என்று சொல்ல, அப்புடியா, நீ ஐயர் வீட்டு பையன்ல நான் நினைச்சுகிட்டு இருக்கேன் என்று சொன்னார்.

சார், அவன் ஒரு கோழிய வறுத்து வச்சா, ஒரே ஆளா சாப்டுருவான் சார் என்று உடன் இருந்த பையன் சொல்ல எல்லோரும் சிரித்து விட்டோம்.

எத்தனையோ பேர் என்னை ஐயர் என்று நினைத்ததுண்டு, எனக்கு அந்த விஷயம் தெரிய வரும் போது எனக்கு சிரிப்பு தான் வரும். இது எப்படி என்னையோ என் இனத்தையோ இழிவு படுத்துவது போலாகும்.

குமுததின் இந்த செயலில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை, காரணம் இந்த பத்திரிக்கைகளின் நிறம் எனக்கு தெரியும். சேதுராமன் விளம்பரத்திற்கு ஆசைப்படுகிறார், குமுதம் வியாபாராத்திற்கு ஆசைப்படுகிறது.

பத்திரிக்கைகள் பற்றிய, என் சில பதிவுகள்

பத்திரிக்கைகளின் கயமைத்தனம்

நாட்டிற்கு தேவையா இந்த சேதி,

என்னங்கடா விளையாடறீங்களா. . . . ., தமிழ் நாடு அமைதியா இருக்கறது உங்களுக்கு புடிக்கவில்லையா . . . . ?

வையகம் காப்பவே ரேனும் - சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யக லத்தொழில் செய்தே - பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மோலோர்

-பாரதி